Asia Cup 2025, India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடருக்கு தற்போது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அடுத்த ஆண்டு 2026 டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதை ஒட்டி, ஆசிய கோப்பை 2025 தொடரும் டி20 பார்மட்டில் நடைபெற இருக்கிறது.
Asia Cup 2025: இந்த வீரர்கள் விளையாடுவதில் சந்தேகம்
இந்திய அணி (Team India) பிப்ரவரி மாதத்திற்கு பிறகு டி20ஐ பார்மட்டில் விளையாட இருப்பதால் ஸ்குவாட் எப்படி அமையப்போகிறது என்ற கேள்வி பலரிடத்திலும் உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் நிச்சயம் டி20ஐ ஸ்குவாடில் விளையாட மாட்டார்கள் எனலாம். தொடர்ந்து டி20ஐ கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ் இன்னும் முழு உடற்தகுதியை பெறாத நிலையில் அவர் ஆசிய கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Asia Cup 2025: ஓப்பனிங்கில் யார் யார்?
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் – அபிஷேக் சர்மா ஆகியோர்தான் ஓப்பனிங்கில் விளையாடி வந்தனர். ஆனால், சுப்மான் கில் டி20ஐ அணிக்குள் வர இருப்பதாக கூறப்படும் நிலையில், ஓப்பனிங்கில் யார் இறங்குவார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த சாய் சுதர்சனுக்கு ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டி20 ஸ்குவாடில் வர இருப்பதாக தகவல்கள வலுக்கின்றன.
Asia Cup 2025: ஆல்-ரவுண்டருக்கு பஞ்சம் இருக்காது
ஆல்-ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அக்சர் பட்டேல் முழு உடற்தகுதி பெறாத நிலையில் அவர் விளையாட மாட்டார் என்றே கூறப்படுகிறது. இதனால் இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக குர்னால் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரமன்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு குறைவுதான். இதனால் ரியான் பராக் உள்ளே வர வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் விக்கெட் இருப்பதால் கேஎல் ராகுல் அல்லது துருவ் ஜூரேல் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
Asia Cup 2025: பந்துவீச்சு படை எப்படி இருக்கும்?
சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்திக்கு இடம் உறுதி. குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். மயங்க் யாதவ் தற்போது உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஆசிய கோப்பைக்கான வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி வலுவான அணியாக தென்படுவதால் நிச்சயம் ஆசிய கோப்பையை தக்கவைப்பது மட்டுமின்றி, அடுத்து வரும் டி20 உலகக் கோப்பையையும் தக்கவைக்க முடியும் என பலரும் நம்புகிறார்கள்.
Asia Cup 2025: ஆசிய கோப்பையில் 8 அணிகள்
இதனால் மட்டும் ஆசிய கோப்பைக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழவில்லை. வரும் செப். 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்புள்ளது, இதனால்தான் அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். அதன்பின் இரண்டு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அடுத்த ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். இதன் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப். 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் 3 முறை மோத வாய்ப்பு
அந்த வகையில், குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் (India vs Pakistan) வரும் செப். 14ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை குரூப் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதலிரண்டு இடங்களை பிடிக்கும்பட்சத்தில், சூப்பர் 4 சுற்றில் செப். 24ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் (A1 vs A2) அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் மீண்டும் ஒரு முறை நடைபெற வாய்ப்பு உண்டாகும். இதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தினால் போதுமானது.
அதே நேரத்தில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் முதலிரண்டு இடங்களை பிடித்தால் இறுதிப்போட்டியிலும் இவ்விரு அணிகள் மோதும் வாய்ப்பு உண்டாகும். இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும் ஒருவேளை நடந்தால் நிச்சயம் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்கப்போவதில்லை.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2025: இந்த வீரர் விளையாட சிக்கல்… வெயிட்டிங்கில் சூர்யகுமார்
மேலும் படிக்க | அக்சர் படேலுக்கு நடக்கும் அநீதி! பிசிசிஐ இப்படி பண்ணலாமா? ரசிகர்கள் கோபம்
மேலும் படிக்க | ஆசிய கோப்பையில் இடம் பெரும் 4 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்! யார் யாருக்கு வாய்ப்பு?