புதுடெல்லி,
நாட்டு மக்களிடையே தேசப்பற்றை அதிகரிக்கும் வகையில் இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றும் பிரசாரமான ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது. இதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில நாட்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுகிறார்கள். இதனை ‘செல்பி’ படம் எடுத்து பதிவேற்றமும் செய்கிறார்கள்.
இந்த பிரசார இயக்கம் இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லியில் இன்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று தேசியக்கொடியை ஏற்றினார். இதுபோல மேலும் பல தலைவர்களும் கொடி ஏற்றினார்கள். அரியானா முதல்-மந்திரி நயாப்சிங் ஷைனி, உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி ஆகியோரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றினர்.