சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாட வேண்டியவர் ஹர்திக் பாண்டியா – இர்பான் பதான் சொன்ன ரகசியம்

Irfan Pathan: ஹர்திக் பாண்டியாவை விமர்சித்ததால் ஐபிஎல் 2025 கமெண்ட்ரி பேனலில் இருந்து நீக்கப்பட்ட இர்பான் பதான் இது குறித்த விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஒளிபரப்பாளராக அதுதான் என்னுடைய வேலை என தெரிவித்திருக்கும் இர்பான் பதான், ரோகித் சர்மா, விராட்  கோலியை விமர்சித்தபோது இப்படியான விளைவுகளை தான் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி கமெண்டரி பேனலில் என்ன வேலை செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ததாகவும் கூறினார். மேலும், ஹர்திக் பாண்டியா மீது எனக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை என கூறியிருக்கிறார்.  

அவருக்காக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்திடம் 2012 ஆம் ஆண்டே பேசியவன் நான் என்று கூறியுள்ள இர்பான் பதான், அப்போது அந்த அணியின் பொறுப்பாளராக இருந்த விவிஎஸ் லக்ஷ்மன் இதை ஏற்கவில்லை என்றும், பின்னாளில் அந்த தவறுக்கு தன்னிடம் வருத்தம் தெரிவித்துள்ளதையும் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2025 தொடரின்போது கமெண்ட்ரி பேனலில் பாதியில் நீக்கப்பட்டது குறித்து தனியார் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கும் பேட்டியில் இந்த தகவலை இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இர்பான் பதான் பேசும்போது, “ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த பிறகே ஐபிஎல் 2025 கமெண்டரி பேனலில் இருந்து நான் நீக்கப்பட்டேன். ஆனால், ஒளிபரப்பாளராக கமெண்ட்ரி பேனலில் அதுதான் என்னுடைய வேலை. அவர் சரியாக ஆடாதபோது தவறுகளை சுட்டிக்காட்டுவது ஒரு கிரிக்கெட் நிபுணர் செய்யக்கூடிய பணியும் அதுதான். உண்மையை சொல்லப்போனால், ஐபிஎல் 2012ல் அவரை ஏலத்தில் எடுக்குமாறு சன்ரைசர்ஸ் அணி நிர்வாக பொறுப்பில் அப்போது இருந்த விவிஎஸ் லக்ஷ்மனிடம் கூறியவன் நான்.

ஆனால் விவிஎஸ் அப்போது அதை செய்யவில்லை. இதற்காக பின்னாளில் என்னிடம் வருத்தம் கூட விவிஎஸ் தெரிவித்தார். என்னுடைய கோரிக்கையை விவிஎஸ் செய்திருந்தால் இந்நேரம் ஹர்திக் பாண்டியா சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி இருந்திருப்பார். அதுமட்டுமல்ல, உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் நானும் யூசப் பதானும் விளையாடிய பரோடா அணி பிளேயர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம். வாய்ப்புகளை எங்களால் முடிந்தளவு தேடிக் கொடுத்துக்கொண்டு தான் இருந்திருக்கிறோம். அதனால், யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபம், பகை என எதுவும் இல்லை. 

அப்படி இருக்கிறபோது ஐபிஎல் கமெண்ட்டரி பேனலில் இருந்து நீக்கப்பட்டது துருதிருஷ்டவசமானது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விமர்சித்தபோது கூட இப்படியான எதிர்வினைகள் எல்லாம் வரவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இர்பான் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐபிஎல் கமெண்ட்ரி பேனலில் இருந்து பாதியில் நீக்கப்பட்டார். இதற்கு பின்னணியில் ரோகித் சர்மா அல்லது விராட் கோலி ஆகியோர் இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. ஏனென்றால் அந்த நேரத்தில் இவர்கள் இருவர் மீது இர்பான் பதான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ரோகித், விராட் இதற்கு காரணமில்லை என இர்பான் பதான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.