மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் டி20 ஓவர் கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக தொடக்க வரிசையில் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டிருப்பதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் ஆன அபிஷேக் சர்மாவுக்கு இடம் உறுதி. ஒரு வேளை கில் தொடக்க வீரராக இறங்கினால் சாம்சனுக்கு இடமிருக்காது. இதனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் – சுப்மன் கில் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சாம்சனுக்கு பதிலாக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளதை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “சுப்மன் கில்லை தேர்வு செய்திருப்பதன் மூலம் தொடக்க வீரர்களுக்கான பரிசீலனையில் மேலும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சில மாதங்களாக சுப்மன் கில் அபார பார்மில் உள்ளார். இந்திய அணி துபாய் சென்றதும், எதிரணி மற்றும் சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் முடிவு செய்வார்கள். குறிப்பிட்ட சமயத்தில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் டி20 அணித்தேர்வுக்கு தயாராக இல்லாதபோதுதான் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக ஆடினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா – சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளது ஏறக்குறைய உறுதி ஆகி உள்ளது.