டெல் அவிவ்,
காசாவின் தெற்கே அமைந்த முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களும் அடங்குவர்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய மருத்துவ மற்றும் ஊழியர்கள் வசதியின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவமனையை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இவர்களில் 5 பேர் பத்திரிகையாளர்கள் ஆவர். இதனை காசா சுகாதார துறை உறுதி செய்துள்ளது. காசா மருத்துவமனையில் நடந்த இந்த தாக்குதலுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் குடிமக்கள் அனைவரின் பணிகளுக்கு இஸ்ரேல் மதிப்பளிக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், இதனால், அதிர்ச்சியடைந்தனர். பயத்தில் இருந்த அவர்கள் தப்பி செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
காசா பகுதி முழுவதும் நேற்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 6-ந்தேதியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஆயிரம் கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரில் இறங்கிய இஸ்ரேல் 21 மாதங்களுக்கும் மேலாக தாக்குதலில் ஈடுபட்டு வருவதில், பாலஸ்தீனியர்கள் பலர் பலியாகி வருகின்றனர். இதில், காசா பகுதியில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.