பீஜிங்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை பிரச்சினை, அமெரிக்க வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக, இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல், எல்லை பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இந்தியா-சீனா இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், இரு நாடுகளும் பத்திரிகையாளர்களை பரஸ்பரம் தங்களது நாடுகளில் தங்கி செய்தி சேகரிக்க அனுமதிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.