புதுடெல்லி,
பீகாரில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை செய்தது. இதில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபம் தெரிவிக்கவோ, திருத்தம் மேற்கொள்வோ செப்டம்பர் 1-ந் தேதி வரை (அதாவது நாளை வரை) கால அவகாசத்தையும் தேர்தல் கமிஷன் தெரிவித்து இருந்தது. இதனிடையே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆதார் அட்டை உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட 11 ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்தநிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் புதிய அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனவே, புதிய புகைப்படம் வாக்காளர்களின் பதிவுகளைப் புதுப்பிக்கவும் புதிய வாக்காளர் அட்டைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.