ராம்கார்,
ஜார்கண்டின் ராம்கார் மாவட்டத்தில் முருபண்டா கிராமத்தில் ராம்கார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், பொகாரோ மாவட்டத்தின் புஸ்ரோ பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர், பி.டெக் கணினி பிரிவில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவரை மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்தும், அடித்தும், கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதுபற்றி அக்கல்லூரியின் துணை முதல்வர் நஜ்மல் இஸ்லாம் கூறும்போது, அந்த மாணவன் ஆன்லைன் வழியே தேசிய ராகிங் ஒழிப்பு பிரிவில் புகார் அளித்து இருக்கிறார்.
இதனடிப்படையில், 2-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர் சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் என்றார்.
இதுபற்றி ராம்கார் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரெண்டு அஜய் குமார் கூறும்போது, கல்லூரி வளாகத்தில் நடக்க கூடிய ராகிங்கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராகிங்கில் ஈடுபட்ட மூத்த மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரியின் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.