டெல்லி,
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனாநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறங்கினார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி களமிறக்கினார்.
தேர்தலில் 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 767 வாக்குகள் மட்டுமே பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்ட நிலையில் அதில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
எஞ்சிய 752 வாக்குகளில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தேர்தல் முடிவுகள் எனக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் நாம் கூட்டாக இணைந்து முன்னேறும் நோக்கம் குறையாமல் உள்ளது. சித்தாந்த ரீதியிலான போராட்டம் மேலும் வலிமையுடன் தொடரும். என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி. நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமல்ல பேச்சுவார்த்தை, பங்கேற்பு உள்ளிட்டவற்றாலும் வலிமையடைகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றிபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.