30 ஆண்டு கால ஊழலை விசாரிக்கவும்; நேபாள அரசமைப்பை திருத்தவும் – ஜென் z போராட்டக்காரர்கள் நிபந்தனை!

காத்மாண்டு: நே​பாளத்​தில் இளம் தலை​முறை​யினரின் ஊழல் எதிர்ப்பு போராட்​டம் தீவிரமடைந்ததன் ​காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜி​னாமா செய்​துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அவை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய நிபந்தனைகள் என்னென்ன? >> பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
>> குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும்.
>> விரைவில், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும்.
>> கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோத சொத்துகள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டும்.
>>அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் தேவை. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீதித்துறை, பாதுகாப்பு, தொலைதொடர்பு துறைகளில் சீர்திருத்தம் தேவை. ஆகிய கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 19 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் இனியும் வன்முறை சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதில் ராணுவம் கவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்தியா பயண எச்சரிக்கை: சூழல் இவ்வாறாக இருக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் அவரவர் இருக்குமிடங்களிலேயே பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. நேபாளத்துக்கான இந்திய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியா – நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் நிலை என்னவானது என்ற கேள்வி நிலவிய நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கர்நாடகா முதல்வர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

போராட்டத்தின் பின்னணி: சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது நேபாளத்​தின் அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்தச் சூழலில் பேஸ்​புக், யூ டியூப், எக்​ஸ், டெலிகி​ராம் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலைதள கணக்​கு​களை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்​கியது. சீனா​வின் டிக்​டாக் செயலிக்கு மட்​டும் தடை விதிக்​கப்​பட​வில்​லை. இது, நேபாள இளம் தலை​முறை​யினரிடையே கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது.

கடந்த சில நாட்​களாக 28 வயதுக்கு உட்​பட்ட இளம் தலை​முறை​யினர் தலைநகர் காத்​மாண்​டு​வில் குவிந்து ஊழலுக்கு எதி​ராக பல்​வேறு போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர். அவர்​கள் நேற்று முன்​தினம் நாடாளு​மன்​றத்தை முற்​றுகை​யிட முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை எறிந்து தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக போராட்​டக்​காரர்​கள் மீது துப்​பாக்​கிச்​சூடு நடத்​தப்​பட்​டது. இதில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 400-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இதைத் தொடர்ந்து நேபாளம் முழு​வதும் வன்​முறை, கலவரம் வெடித்​தது. பல்​வேறு பகு​தி​களில் இருந்து தலைநகர் காத்​மாண்​டு​வில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்​டனர். காத்​மாண்​டு​வில் உள்ள அதிபர், பிரதமர், உள்​துறை அமைச்​சரின் மாளி​கைகளுக்கு போராட்​டக்​காரர்​கள் நேற்று தீ வைத்​தனர்.

நாடாளு​மன்​றத்​தின் ஒரு பகு​திக்​கும் தீ வைக்​கப்​பட்​டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலி​காப்​டரில் பாது​காப்​பான இடத்​துக்கு தப்​பிச் சென்​றார். இந்த சூழலில் பிரதமர் சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.