அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்றிரவு தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தானுக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. ரமனுல்லா குர்பாஸ் 8 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். தொடர்ந்து முகமது நபி 33 ரன்னிலும், குல்படின் நைப் 5 ரன்னிலும் வெளியேறினர். 95 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து (13 ஓவர்) நெருக்கடிக்குள்ளான ஆப்கானிஸ்தானை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் செடிகுல்லா அடலும், ஆல்-ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் தூக்கி நிறுத்தினர்.
குறிப்பாக கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஒமர்ஜாய், வேகப்பந்து வீச்சாளர் ஆயுஷ் சுக்லாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி தனது முதலாவது அரைசதத்தை 20 பந்துகளில் எட்டினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்பு முகமது நபி, குல்படின் நைப் தலா 21 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஒமர்ஜாய் 53 ரன்களில் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. 3 முறை கண்டம் தப்பிய செடிகுல்லா அடல் 73 ரன்களுடன் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
பின்னர் 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் ஹயாத் (39 ரன்), கேப்டன் யாசிம் முர்தசா (18 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்ைற இலக்கத்தை தாண்டவில்லை. பரூக்கி, குல்படின் நைப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.