இந்திய துணை ஜனாதிபதி பதவியில் இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் கட்சி தரப்பினரின் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் என்ற குற்றச்சாட்டு நிலவிவரும் நிலையில் ராஜினாமா செய்த நாளில் இருந்து இதுவரை ஜெகதீப் தன்கர் பொதுவெளியில் வரவில்லை. இதுதொடர்பாக கருத்து எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது.மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் 50 நாட்களாக மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-கடந்த 50 நாட்களாக ஜெகதீப் தன்கர் வழக்கத்துக்கு மாறான மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அவரது பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. மோடி அரசாங்கத்தால் விவசாயிகள் முழுமையாக புறக்கணிக்கப்படுவது குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அகங்காரம் ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்திய பிறகு தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தவர் ஜெகதீப் தன்கர். அவர் பேசுவதற்காக இந்தியா தொடர்ந்து காத்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.