துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், துபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் தம்முடைய பந்துவீச்சில் முன்னேற பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முக்கிய காரணம் என்று ஷிவம் துபே தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல்.-ல் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதால் பந்து வீச அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கேப்டனும் பயிற்சியாளரும் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆசிய கோப்பையில் நான் பந்துவீச வேண்டியிருக்கும் என்பதை கூறிவிட்டனர். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் எனக்கு பல விஷயங்களை கூறியுள்ளார். நான் நீண்ட காலமாக இதற்கு தயாராகி வந்தேன்.
ஐ.பி.எல்.-ல் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஆல்ரவுண்டரின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அதனால், ஐ.பி.எல்.-ல் நான் பந்து வீச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால், என் பங்குக்கு, நான் எப்போதும் தயாராகவே இருந்தேன். ஒவ்வொரு போட்டியிலும், பந்து வீசுவதற்கு நான் தயாராக இருந்தேன். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பும் நான் கடுமையாக உழைத்தேன். இரண்டு மாதங்களாக எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன்.
கடந்த இங்கிலாந்து டி20 தொடரின்போது மோர்கல் சில ஆலோசனைகளை தெரிவித்தார். குறிப்பாக ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே பந்தை வீசுவதில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கூறினார். அத்துடன் மெதுவான பந்துகளை வீசுவதற்கான ஆலோசனையையும் கொடுத்த அவர் ரன்-அப்பையும் சரிசெய்ய உதவினார். அந்த மாற்றங்களால் என்னால் நன்றாக பவுலிங் செய்ய முடிகிறது. அவற்றை பின்பற்றி நீண்ட காலம் தயாரானதற்கான பரிசுகள் இப்போது கிடைத்துள்ளது. என்னுடைய வேகமும் நன்றாக இருப்பதால் பந்தை நம்பிக்கையுடன் கையில் எடுக்கிறேன்.
இன்றைய தொடக்கம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆல்ரவுண்டராக, நான் எப்போதும் நான்கு ஓவர்கள் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறேன். மூன்று-நான்கு ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கிடைக்கும்போது, நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அணிக்கு தேவையானதை நான் செய்ய முயற்சிப்பேன்.
ஹர்திக் எனக்கு எப்போதும் கற்றுக்கொடுப்பவர். அவர் எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர். ஒரு கிரிக்கெட் வீரராக, அவருக்கு சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல்.-ல் நிறைய அனுபவம் உள்ளது. எனவே, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் ஒப்பீடு பற்றி யோசிக்கவில்லை. அவரிடமிருந்து ஏதாவது ஒன்றைப் பெற்று, அதன் மூலம் நான் மேம்பட வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்” என கூறினார்.