நியூயார்க்,
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கடுமை காட்டி வருகிறார். இதற்காக 25 சதவீத அபராதம் உள்பட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார்.மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சமீபத்தில் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.இதன் தொடர்ச்சியாக வளர்ந்த நாடுகளை கொண்ட கூட்டமைப்பான ஜி7 அமைப்புக்கும் அமெரிக்கா அறிவுறுத்தி இருக்கிறது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட இந்த அமைப்பின் நிதி மந்திரிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதுஇதில் கலந்துகொண்ட அமெரிக்க நிதி மந்திரி ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்த வலியுறுத்தலை வைத்தனர்.
மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவையே அமெரிக்கா தொடர்ந்து குறிவைத்து இருக்கிறது. ரஷிய எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு எந்த வரியும் விதிக்கவில்லை.எனவே ஜி7 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வரி அழைப்பும் இந்தியாவுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்வது அம்பலமாகி இருக்கிறது.
இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்தவேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் சீனா மீது வரி விதிக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில், ‘போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்துக்கும் மிகக்குறைவாகவே உள்ளது. மேலும் நேட்டோவின் சில உறுப்பினர்கள் ரஷிய எண்ணெய் வாங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.’ என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர், ‘நேட்டோ உறுப்பினர்கள் சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்.