அனைவரும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்திய அணி 3 லீக் போட்டிகள் மற்றும் 1 சூப்பர் 4 போட்டியில் விளையாடி உள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜெய்ஸ்வால் முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
ஜெய்ஸ்வாலின் பதில்
இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவது தேர்வாளர்கள் கையில் உள்ளது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் ஜெய்ஸ்வால். இருப்பினும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் நீடிக்க, ஷுப்மன் கில் துணை கேப்டனாக அணிக்கு திரும்பினார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய ஜெய்ஸ்வால், “நான் அதை பற்றி சிந்திப்பதில்லை. அது முற்றிலும் தேர்வாளர்களின் கையில் உள்ளது. அணிக்கு எது தேவையோ, அந்த காம்பினேஷனுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படுகின்றன. என் கையில் என்ன உள்ளதோ, அதை நான் செய்வேன்,” என்று முதிர்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
அணியில் இடம் கிடைக்காததற்கான காரணம்
ஜெய்ஸ்வால் ஏன் எடுக்கப்படவில்லை என்பது குறித்து இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்திருந்தார். “யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி வருவதோடு, ஒரு பந்துவீச்சு தேர்வையும் எங்களுக்கு அளிக்கிறார். அதனால், இருவரில் ஒருவர் வெளியேற வேண்டியிருந்தது. அதேபோல், ஷ்ரேயாஸ் ஐயரும் எந்த தவறும் செய்யாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் தங்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. அந்த தொடரில் அவருக்கு பதிலாகக் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால், அவர்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
ஜெய்ஸ்வாலின் புள்ளிவிவரங்கள்
இந்திய அணிக்காக 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், 164.31 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 723 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியிலும் இவர் முக்கிய பங்காற்றினார். திறமை இருந்தபோதிலும், அணியின் தேவை கருதி அவர் ஆசிய கோப்பையில் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தாலும், ஜெய்ஸ்வாலின் வருகைக்காக பலரும் காத்து கொண்டுள்ளனர்.
About the Author
RK Spark