Ravichandran Ashwin : ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட முனைப்பு காட்டி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி20 போட்டிகளில் அவர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னி தண்டர்ஸ் அணி அஸ்வினை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Add Zee News as a Preferred Source
அப்படி, சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால், அவர் பாகிஸ்தானின் ஷதாப் கான், நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன் உள்ளிட்ட பிளேயர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அத்துடன் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக இருக்கும் வெளிநாட்டு பிக்பாஷ் டி20 போட்டிகளில் விளையாடும் இந்தியாவின் முதல் பிளேயர் என்ற பெயரை அஸ்வின் பெறுவார். அதாவது, இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி முத்திரை பதித்துவிட்டு பிக்பாஷ் லீக்கில் பங்கேற்கும் பிளேயராக அஸ்வின் இருப்பார்.
BBL-லில் அஸ்வின் ஆடுவது ஏன் ஒரு பெரிய விஷயம்?
பிசிசிஐ விதிகளின்படி, ஐபிஎல்-லில் விளையாடும் இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்க முடியாது. ஆனால், அஸ்வின் கடந்த மாதம் ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெற்றதால், அவருக்கு இனி வெளிநாட்டு லீக்குகளில் விளையாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அவர் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ILT20 லீக்கிலும், இங்கிலாந்தின் ‘தி ஹன்ட்ரெட்’ (The Hundred) தொடரிலும் விளையாட ஆர்வம் காட்டியிருந்தார். இப்போது பிபிஎல்-லும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு டி20 லீக்குகளில் விளையாட வேண்டும் என்ற அவரது திட்டத்துக்கு வலு சேர்க்கும்.
சிட்னி தண்டரில் அஸ்வின்
சிட்னி தண்டர் அணி, பாகிஸ்தானின் ஷதாப் கான் மற்றும் நியூசிலாந்தின் லாகி பெர்குசன் ஆகியோரை ஏற்கனவே தங்கள் வெளிநாட்டு வீரர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது. அஸ்வின் இவர்களுடன் இணைந்தால், அது அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். எனினும், ஒரு சின்ன சிக்கல் உள்ளது. அஸ்வின் இந்த ஆண்டுக்கான பிபிஎல் வெளிநாட்டு வீரர் வரைவில் (draft) தனது பெயரைப் பதிவு செய்யவில்லை. எனவே, அவர் விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விதிவிலக்கு வழங்க வேண்டும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உன்முக்த் சந்த் என்ற இந்திய வீரர் ஏற்கெனவே 2021/22 சீசனில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் பிபிஎல்-லில் விளையாடி இருக்கிறார். ஆனால், ஒரு பிரபலமான மற்றும் அனுபவமிக்க வீரராக இருக்கும் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட்டர் அஸ்வின் பிபிஎல்-லில் களமிறங்குவது, இந்த லீக்கிற்கு புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில், 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளையும், 833 ரன்களையும் எடுத்துள்ளார். அவர் 2010 மற்றும் 2011-ல் ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.