புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதித்தார்.
இந்தநிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகிற அக்.1-ம் தேதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.மேலும் அமெரிக்காவை மையமாக்கொண்டு உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமெரிக்காவிற்குள் மருந்து தொழிற்சாலை கட்டுமான பணிகளை தொடங்கினால் வரி விதிப்பு இல்லை என்றும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
புதிய வரிகள் குறித்து சமூக ஊடகங்களில் நேற்று ஒரு அறிவிப்பைப் பார்த்தோம். மருந்து மற்றும் பிற தயாரிப்புகள் குறித்த அறிக்கையை நாங்கள் பார்த்தோம், மேலும் தொடர்புடைய அமைச்சகமும் துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து அதன் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றன.பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் குறித்து நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் பேசி இருப்பதை நாங்கள் பார்த்தோம்.
அவரது கருத்துக்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானது, முற்றிலும் ஆதாரமற்றது. எந்த நேரத்திலும் பிரதமர் மோடி, அதிபர் புதின் இடையே உக்ரைன் போர் குறித்து உரையாடல் எதுவும் நடக்கவில்லை.முக்கிய சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் பொதுக் கருத்துக்களில் அதிக பொறுப்பையும், துல்லியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒருபோதும் நடக்காத உரையாடலை நடந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியா தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும்.ஜன.20 முதல் செப்.25 வரை 2,417 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ரஷிய ராணுவத்தில் பணி என்ற அறிவிப்புகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளைத் தவிர்க்க அனைத்து இந்தியர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். ரஷிய ராணுவத்தில் 27 இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். காஷ்மீர் குறித்த எங்கள் அறிக்கை தெளிவாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நிலைப்பாடு அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.