மும்பை,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணி பட்டியலை வெளியிட்டார். இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார்.
டெஸ்ட் அணியில் 8 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து தொடரின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய கருண் நாயர் இடம்பெறவில்லை. அவர் மறுபிரவேசம் செய்த இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. அவர் 4 டெஸ்டில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 205 ரன்களே எடுத்தார். தனது மறுபிரவேச வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாத 33 வயது கருண் நாயருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கருண் நாயர் விசயத்தில் உண்மை யாதெனில் இனி அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது. இதை ஏற்றுக்கொள்ள அவருக்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் தேர்வுக்குழுவினர் அவரை விட்டு நகர்ந்து விட்டனர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து தொடர் கடினமான தொடர் என்றாலும் அந்தத் தொடரில் அவர் ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்ய தவறிவிட்டார். இந்தியாவில் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடினால் நிச்சயம் ரன்களை குவிக்க முடியும். ஆனாலும் நிர்வாகம் வழங்கிய வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட தவறியதால் தேர்வுக்குழு அவரை விட்டு நகர்ந்து விட்டது மேலும் அவரது இடத்தினை தற்போது தேவ்தத் படிக்கல் போன்ற ஒரு இளம் வீரருக்கு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 6.45