ரூ.17,762 கோடிக்கு விற்பனை! ஆர்சிபி அணியின் புதிய ஓனர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை மற்றும் மும்பையை தொடர்ந்து, மிகவும் பிரபலமான மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது. இந்நிலையில் அதன் உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிரிக்கெட் மற்றும் வர்த்தக உலகில் ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியை வாங்குவதற்கான போட்டியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான அடர் பூனாவாலா முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

விற்பனைக்கான காரணம் என்ன?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு மதுபான நிறுவனமான Diageoவின் துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இருந்து வருகிறது. கிரிக்கெட் அணி நிர்வாகம், தங்களது முக்கிய தொழில் இல்லை என்று டயாஜியோ கருதுவதே, இந்த விற்பனை முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், 2025ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை முதன் முறையாக ஆர்.சி.பி வென்றதை கொண்டாடும் விதமாக, பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. இந்த துயர சம்பவத்திற்கு பிறகே, ஆர்.சி.பி அணியை விற்பனை செய்வது குறித்த பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

பிரமிக்க வைக்கும் மதிப்பீடு

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம், ஆர்.சி.பி அணிக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,762 கோடி என்ற மிக பிரம்மாண்டமான விலையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விற்பனை முடிந்தால் ஆர்.சி.பி அணி, உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு அணிகளில் ஒன்றாக மாறும். இந்த விற்பனை பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான சிட்டி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு மதிப்பு?

ஆர்.சி.பி அணி, 2025ம் ஆண்டு வரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற போதிலும், அதன் பிராண்ட் மதிப்பு எப்போதுமே உச்சத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம், இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி, அந்த அணிக்காக விளையாடி வருவதும், அந்த அணிக்கு உலகம் முழுவதும் இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் தான். 2025ல் கோப்பையை வென்றது, அதன் மதிப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. சமீபத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் 67% பங்குகள், சுமார் ரூ.7,500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒப்பிடுகையில், மிக குறைந்த ரசிகர் பட்டாளத்தை கொண்ட குஜராத் அணிக்கே இவ்வளவு மதிப்பு என்றால், ஆர்.சி.பியின் விற்பனை, ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை நிச்சயம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லலித் மோடியின் கருத்து

ஐபிஎல் முன்னாள் ஆணையரான லலித் மோடி, இது குறித்து கூறுகையில், “ஐபிஎல் அணி விற்பனை குறித்த வதந்திகள் நீண்ட காலமாகவே உள்ளன. ஆனால், இப்போது அது உண்மையாகியுள்ளது. ஆர்.சி.பியின் விற்பனை, ஐபிஎல் அணிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயிக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமையும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த விற்பனை, வெறும் ஒரு அணி கை மாறுவது மட்டுமல்லாமல், இந்திய விளையாட்டு வர்த்தகத்தின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.