ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் மாற்றங்களையும், சவால்களையும் சந்தித்து வருகிறது. 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது ராஜஸ்தான் அணி. இதனை தொடர்ந்து அணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இது கேப்டன் சஞ்சு சாம்சனின் எதிர்காலத்தையும் தற்போது கேள்விக்குறியாக்கி உள்ளது. முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Add Zee News as a Preferred Source
அணியில் பெரும் மாற்றம்
2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஆனால், ராஜஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அணி நிர்வாகத்தில் முதல் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து, அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்கரம் அவர்களும் வெளியேறினார்.
இந்த அதிர்ச்சிகள் முடிவதற்குள், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே மற்றும் நீண்டகால பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் ஆகியோரும் அணியிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளனர். திஷாந்த் யாக்னிக் ராஜஸ்தான் அணிக்காக ஒரு வீரராகவும், 2018 முதல் பீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விலகல்கள், அணி நிர்வாகத்தில் ஒரு முழுமையான மறுசீரமைப்பு நடைபெறுவதை உறுதி செய்துள்ளது.
சஞ்சு சாம்சனின் எதிர்காலம் என்ன?
ராஜஸ்தான் அணியின் இந்த மோசமான நிலை மற்றும் நிர்வாக மாற்றங்கள் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த சீசனில் தனக்கு ஏற்பட்ட காயம் சரியாக கையாளப்படவில்லை என்றும், ஜோஸ் பட்லர் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் விடுவித்தது போன்ற முடிவுகளால் சாம்சன் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு சாம்சன் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சஞ்சு சாம்சனை, சிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜாவுடன் பரிமாற்றம் செய்ய ராஜஸ்தான் அணி முயன்றதாகவும், ஆனால் அந்த கோரிக்கையை சிஎஸ்கே நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய தலைமை?
தற்போது ராஜஸ்தான் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் குமார் சங்கக்காரா, தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஆகியோர் அணியில் தொடர்வார்கள் என தெரிகிறது. சங்கக்காராவின் நம்பிக்கைக்குரிய டிரெவர் பென்னி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. ஒருபுறம் பயிற்சியாளர் குழு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சனின் விலகல் குறித்த செய்திகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் 2026 ஏலத்திற்குள் இந்த சிக்கல்களைச் சரிசெய்து, ஒரு வலுவான அணியை உருவாக்குமா அல்லது சஞ்சு சாம்சனை இழந்து புதிய கேப்டனுடன் களமிறங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark