ரோம்,
இத்தாலியின் க்ராசிட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையில் ஆசிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் மினி பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 2 இந்தியர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.மேலும் குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், க்ராசிட்டோ அருகே நடந்த விபத்தில் மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 2 இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததற்கு தூதரகம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.