ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த செப்.17-ம் தேதி உப்பல் பகுதியில் இருந்து தார்நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதற்கு, செல்போன் மூலம் ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனுக்கு பணம் அனுப்பினார்.
அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் நண்பரான முகமது சையது சல்மான் என்கிற சுல்தான், முதியவர் பணம் அனுப்பும்போது, ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார். பிறகு அந்த முதியவரை திசை திருப்பி செல்போனையும் திருடி விட்டார். பின்னர், முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.95 லட்சத்தை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக்கொண்டனர்.
இது தொடர்பான புகாரில் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனை பிடித்து விசாரணை நடத்தியதில் நடந்த உண்மைகள் வெளிவந்தன. முதியவரின் செல்போன் மூலம் பெட்ரோல் பங்க், கடைகள், என பல இடங்களில் ஸ்கேன் செய்து, பணத்தை பெற்றுள்ளனர்.
மேலும், செல்போனில் ரம்மி விளையாடுபவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அந்த தொகையை அனுப்பி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.