தேசிய தலைவர்: “தேவரை சாதித் தலைவர் எனக் கூறுவதில் என்ன தவறு" – காட்டமான மோகன் ஜீ

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியிருக்கிறது ‘தேசியத் தலைவர்’ திரைப்படம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷிர் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை கௌதமி, நடிகர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பேரரசு, ஆர்.பி.உதயகுமார், திரௌபதி படத்தின் இயக்குநர் மோகன் ஜி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா
தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா

இந்த நிகழ்வில் உரையாற்றிய இயக்குநர் மோகன் ஜி, “இந்த வருடம் இரண்டு தேவர் ஜெயந்தி விழா. 24-ம் தேதி வெளியாகும் இந்தபடத்துக்கான திரையரங்கில் ஒரு விழாவும், பசும்பொன்னில் ஒரு விழாவும் நடக்கும் என நினைக்கிறேன்.

தேவருக்காக ஆகம விதிப்படி கோயில் கட்டி, ஆரத்தி, திருநீறு என, பழனி முருகனுக்கு விழா எடுப்பதை போன்று தெய்வமாக வணங்குகிறார்கள் என்றால், அவர் எப்படி வாழ்ந்திருப்பார்.

குற்றப்பரம்பரை சட்டத்தை உடைத்தது, மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் என அவர் செய்தது அதிகம். இதையெல்லாம் எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இதையெல்லாம் எடுக்க சரியான இயக்குநராக அரவிந்த் சாரை தேர்வு செய்திருக்கிறார்கள். தேவர் வாழ்க்கையே தைரியமாக உண்மைகளைச் சொன்னதால் சர்ச்சைக்குறியதாக தானே இருந்தது.

அவர் வாழ்க்கைப் படம் மட்டும் எப்படி சர்ச்சையின்றி இருக்கும். சாதாரண வாழ்க்கையை, மகாத்மா காந்தியைப் போன்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்துச் செல்லவில்லை. அவர் குறித்து நிறைய படித்திருக்கிறேன்.

நடிகர் வேலராம மூர்த்தியிடம் தேவர் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை கதையாக எழுதிக்கொடுக்க கேட்டிருக்கிறேன். அவர் எழுதத் தொடங்கிவிட்டார். அந்தப் படத்தில் தேவர் கதாப்பாத்திரம் வரும்.

தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா - மோகன் ஜீ
தேசிய தலைவர் இசை வெளியீட்டு விழா – மோகன் ஜீ

அதை இயக்கத் தயாராக இருக்கிறேன். தேசத்தின் மீதும், தெய்வீகத்தின் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர். காவி உடை போட்டிருப்பதால் விவேகனந்தரை எல்லா அரசியல் தலைவர்களும் மறந்துவிட்டார்கள்.

மதுரை மக்களிடம் விவேகானந்தரை கொண்டு சேர்த்தவர் தேவர். சுபாஷ் சந்திரபோஸ் வடநாட்டவராக இருந்தாலும், அவரின் கொள்கை என்ன என்பதை ஆழமாக புரிந்துகொண்டு அவரை வரவேற்றவர் தேவர்.

தேவரை சாதித் தலைவர் எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? அன்பைக் கற்றுக்கொடுத்தவர்.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்கள் என ஒரு நடிகரின் அரசியல் கட்சியை குற்றம்சாட்டுகிறார்கள். நீங்கள் அரசியல்படுத்தப்பட வேண்டுமென்றால் இந்தப் படத்தைப் பாருங்கள்.” எனப் பேசினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ஆர்.கே.சுரேஷ் ”தேவரை சாதித் தலைவராகப் பார்க்காதீர்கள். அவர் எல்லோருக்குமான தலைவர்” எனப் பேசியிருந்தார்.

பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஆர்.பி உதய குமார் போன்றோரின் கருத்தும் இதன் அடிப்படையில்தான் அமைந்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவே இயக்குநர் மோகன் ஜீயின் பேச்சு அமைந்திருந்தது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.