தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த கத்துக்குட்டி அணி – நமீபியா செய்த சம்பவம்

Namibia vs South Africa : அக்டோபர் 11 ஆம் தேதியான நேற்று நமீபியாவின் விண்தோய்க் நகரில் நடைபெற்ற ஒரேயொரு டி20 போட்டியில், ஐசிசி அசோசியேட் (Associate) அணியான நமீபியா, சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணியாக உள்ள தென்னாப்பிரிக்காவை (South Africa) நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையைப் பதிவு செய்தது. கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம், நமீபிய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாகவும், உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் ஆச்சரியமாகவும் அமைந்தது.

Add Zee News as a Preferred Source

நமீபியா – தென்னாப்பிரிக்கா மோதல்

நமீபியா நாட்டின் விண்தோய்க்கில் புதிதாக அமைக்கப்பட்ட நமீபியா கிரிக்கெட் மைதானத்தின் (Namibia Cricket Ground – NCG) தொடக்க விழாவாக தென்னாப்பிரிக்கா அணியுடன் நமீபியா கிரிக்கெட் அணி மோதும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் உட்பட பல முக்கிய வீரர்கள் பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்காக சென்றிருந்ததால், அணியில் அனுபவம் குறைவான வீரர்களே தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்தனர். டி-காக் மட்டும் அனுபவ பிளேயராக இருந்தார்.

டி-காக் மறுபிரவேசம்

சர்வதேச கிரிக்கெட்டில் நமீபியா அணியை முதல்முறையாக எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா, இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடியது. விண்தோய்க் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக (Slow) இருந்தது. பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தடுமாறினர். 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஓய்வை முடித்துக்கொண்டு மீண்டும் சர்வதேசப் போட்டியில் ஆடிய தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் குவின்டன் டி காக் (Quinton de Kock), ஓப்பனிங் இறங்கி முதல் ஓவரிலேயே வெறும் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஜேசன் ஸ்மித் 31 ரன்கள் மற்றும் ஃபார்ச்சூன் 19 ரன்கள் தவிர, வேறு யாரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால், தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நமீபியா பந்துவீச்சு

நமீபியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரூபன் ட்ரம்பல்மேன் 3 விக்கெட்டுகள் எடுத்து தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கை ஆட்டம் காணச் செய்தார். சுழற்பந்து வீச்சாளர் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் (Bernard Scholtz) தனது 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். பந்துவீச்சில் இருந்த இந்த அழுத்தம் காரணமாகவே தென் ஆப்பிரிக்காவால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

நமீபியா பேட்டிங்

இதனையடுத்து சேஸிங்கை தொடங்கிய நமீபியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆட முயற்சித்தாலும், ரன் வேகத்தை உயர்த்த முடியவில்லை. இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee), தனது முதல் ஓவரிலேயே காயம் காரணமாக வெளியேறியது, தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் (Gerhard Erasmus) நிதானமாக விளையாடி 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 

எனினும், விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே இருந்தன. 7வது ஓவரில் ஜான் நிக்கோல் லாஃப்டி-ஈடன் (Jan Nicol Loftie-Eaton) அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து எராஸ்மஸும் 9.4வது ஓவரில் விக்கெட்டை இழந்தபோது, நமீபியா 66/4 என தடுமாறியது. மிடில் ஆர்டரில் ஜே.ஜே. ஸ்மித் (13 ரன்கள்), மாலன் க்ரூகர் (18 ரன்கள்) ஆகியோர் சிறிய பங்களிப்பை கொடுத்தனர். கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, கிரீன் மற்றும் ட்ரம்பல்மேன் இணைந்து வெறும் 21 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன், அணியை வெற்றியையும் பெற வைத்தனர். தொன்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. நமீபியாவின் ஜேன் கிரீன் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து, ஹீரோ ஆனார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.