சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.
இதற்கிடையே இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில்,
‘விராட் கோலியும், ரோகித் சர்மாவும் கடந்த 15 ஆண்டுகளாக ஏறக்குறைய இந்திய அணியின் ஒவ்வொரு தொடரிலும் அங்கம் வகித்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கு விளையாடுவதை ஆஸ்திரேலிய மக்கள் பார்க்க இருப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம். இருவரும் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்கள். அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போதெல்லாம் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அமோகமாக இருக்கும். காயத்தால் நான் இந்த தொடரில் ஆட முடியாமல் போவது வேதனை அளிக்கிறது. போட்டியை நேரில் பார்க்க அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வருவார்கள். ஏற்கனவே இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எப்போதும் இது போன்ற பெரிய தொடரை தவற விடுவது ஏமாற்றமாக இருக்கும். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வெல்ல விரும்புகிறோம். அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த உலகக் கோப்பையில் ஆடாதவர்கள். அவர்களது செயல்பாடு எப்படி இருக்குப்போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம்’ என்றார்.