சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த அக்.14-ம் தேதி தொடங்கி முதல்நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு, கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. அக்.15-ம் தேதி இந்த நிதியாண்டுக்கான முதல் துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று கரூர் சம்பவம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.
அக்.16-ம் தேதி துணை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று, விவாதத்துக்கு நிதியமைச்சர் பதிலுரை அளித்தார். 16 மசோ தாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேரவை மீண்டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை, அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.