BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு…' வறுத்தெடுத்த வி.சே – ரணகள வீக்கெண்ட்

அப்சரா வெளியேற்றப்பட்டார் என்பதில் சிறிது கூட ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. அந்த அளவிற்கு அவரது பங்களிப்பு மிகக் குறைவானதாக இருந்தது. ஏறத்தாழ இல்லை எனலாம். பின்பெஞ்சு மாணவர்களை வெளுத்து வாங்கும் கறாரான ஸ்கூல் வாத்தியார் பாணியிலேயே விசே விசாரணை நாட்களை நடத்திச் செல்வதால் பார்வையாளர்களுக்கு பெரிதும் சுவாரசியம் இருப்பதில்லை. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 14

BB Tamil 9 Day 14
BB Tamil 9 Day 14

“வீட்டுக்குள்ள பிரச்சினைகள் மட்டுமே இல்ல. நிறைய க்யூட்டான விஷயங்களும் இருக்கு. அதைப் பார்ப்போமோ?” என்றபடி வேட்டி சட்டை அணிந்திருந்த விசே வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

குருவி கத்தும் காலிங் பெல் மாதிரி வினோத் எழுப்பிய ஒலியுடன் கலை நிகழ்ச்சி துவங்கியது. “இந்த வீட்லயே தர்பீஸோட மட்டும்தான் எனக்கு தினமும் பிரச்சினை” என்ற வினோத், திவாகர் செய்யும் அலப்பறைகளை விவரிக்க சபை கலகலத்தது. “மத்த சீசன்கள்ல பையனும் பொண்ணும் பார்த்துக்கற வீடியோதான் வைரல் ஆகும். இங்க மட்டும்தான் நீங்க ரெண்டு பேரும் பார்க்கற வீடியோ வைரல் ஆகுது” என்று கிண்டலடித்தார் விசே. கவுண்டமணி – செந்தில் ஜோடி மாதிரி திவாகரும் வினோத்தும் இணைந்து நடத்தும் காமெடி அலப்பறைதான் சற்று ஆறுதலைத்  தருகிறது. 

சபரி, பிரவீன், விக்ரம் ஆகிய மூவரும் இணைந்து எலிகள் போல ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி கிண்டலடித்துப் பேசியது சுவாரசியமான பகுதி. குறிப்பாக வியன்னா போல கொஞ்சி கொஞ்சி பிரவீன் பேசியது அட்டகாசம். 

இனிப்பு தந்து விட்டு பட்டாசை கையில் எடுத்த விசே

“ஓகே.. தீபாவளி கொண்டாட்டம் முடிஞ்சது. அடுத்தது சீரியஸான பகுதிக்கு போகலாமா?” என்று விசே கையில் பிரம்பை எடுத்ததும் மக்களின் முகங்களில் மெல்ல பீதி பரவ ஆரம்பித்தது. “என்னென்ன தவுசண்ட் வாலா பட்டாசை கொளுத்தப் போறாரோ?” என்று கடவுளை வேண்டிக்கொண்டார்கள். 

முதலில் துஷாரை எழுப்பிய விசே “ஒரு கேப்டனா, இந்த வீட்ல யார் நல்லா வேலை செஞ்சாங்க.. சொல்லுங்க.” என்று வலையை விரிக்க ஆரம்பித்தார். சிறப்பாக வேலை செய்தவர்களின் பெயர்களை துஷார் சொல்ல “அப்ப நீ என்ன செஞ்சே மேன்?” என்கிற மாதிரி பார்த்தார் விசே. “சமையல் செய்யறது முழுக்க நானு. ஆனா கரண்டியை தூக்கி போஸ் கொடுக்கறது மட்டும் சபரி. என்னை முழுக்க மறைச்சிட்டாங்க” என்று புகார் கொடுத்தார் கலையரசன். 

“அப்ப ஏன் சைலன்ட்டா உக்காந்திருந்தீங்க.. உங்க உரிமையை தட்டிக் கேட்டிருக்கலாமில்ல?” என்று கலையரசனுக்கு காட்டமாக அட்வைஸ் செய்தார் விசே. “வீக்கெண்ட்ல நான் பேசறதுக்கு ஏதாவது கன்டென்ட் கொடுங்கடா. நீங்க சும்மா உக்காந்திருந்தா நான் எதைத்தான் பேசறது?”  என்று விசேவின் மைண்ட் வாய்ஸ் அலறியதோ, என்னமோ. 

BB Tamil 9 Day 14
BB Tamil 9 Day 14

“துஷாரோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்று விசே கேட்டதும்தான் தாமதம், நன்றாகப் படிக்கிற பையன், அடிஷனல் ஷீட் வாங்குகிற உற்சாகத்துடன் உடனே கையைத் தூக்கினார் பாரு. “மெஜாரிட்டியா என்ன சொல்றாங்களோ.. அதைத்தான் துஷார் கேப்பான்” என்று போட்டுக் கொடுக்க “இதை நான் ஏத்துக்க மாட்டேன் சார். எனக்கு எது சரின்னு படுதோ, அதைத்தான் செய்வேன்” என்று கெத்தாக சொல்லி மாட்டிக் கொண்டார் துஷார். 

“அப்ப எது உனக்கு சரின்னு படுது.. அரோரா கிட்ட உக்காந்து பொழுதன்னிக்கும் கடலை வறுக்கறதா?” என்று மட்டும்தான் நேரடியாக விசே கேட்கவில்லை. மத்த அனைத்தையும் கேட்டு துஷாரை பிறகு வறுத்தெடுத்தார் விசே. 

“வீட்டின் முதல் கேப்டன்றது எவ்வளவு பெரிய பொறுப்பு. அதை நல்லாப் பண்ணுவீங்கன்னு நெனச்சேன். இப்படி தவற விட்டுட்டிங்களே.. வாய் மூடி பேசாமலேயே சிறந்த கேப்டனா இருப்பேன்னு சொல்லி போட்டில ஜெயிச்சீங்க.. ஆனா சுற்றி என்ன தவறுகள் நடந்தாலும் வாயைத் திறக்காமலேயே இருந்துட்டீங்க.. அந்தச் சவாலை இப்படி நிரூபிப்பீங்கன்னு எதிர்பார்க்கல” என்று விசே செய்த ரோஸ்ட்டிற்கு எந்த வித பதிலும் இல்லாமல் தலைகுனிந்தார் துஷார். 

உப்பு போட்ட பிரச்னைக்கு உப்பு பெறாத பஞ்சாயத்து

“கிச்சன் மேடைல உக்காந்தது ஒரு குத்தமா சார்?” என்று பாரு உற்சாகமாக தன் புகார்களை தொடர “அதெல்லாம் உங்க வீட்டு பழக்கமா இருக்கலாம். ஆனா இங்க மத்தவங்களோட அனுசரிச்சுதான் போகணும். அவங்களுக்கு அது அசௌகரியமா இருக்கலாமில்லையா?” என்று விசே குட்டு வைக்க பாருவின் முகம் இருண்டது. 

அடுத்ததாக உப்பு பெறாத பிரச்சினை என்றாலும் அதை வைத்து கால் மணி நேரத்திற்கு இழுத்தார் விசே. “சாப்பாட்ல உப்பு போடறது சரியா.. துஷார் நீங்க ரெண்டு வீட்டுக்கும்தானே தல.. இதைத் தட்டிக் கேட்டிருக்கணுமா. இல்லையா.. கனி.. நீங்க பயங்கரமான ஆளுதான் போல” என்று விசே சொல்ல நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்தார் கனியக்கா. “பசியோட கொடுமையை அவங்க உணரணும். சீக்கிரம் எழுந்து வெளியே வரணும்… என்பதற்காகவே இந்த நாடகத்தை யாம் நிகழ்த்தினோம்” என்பது கனியின் விளக்கம். 

BB Tamil 9 Day 14
BB Tamil 9 Day 14

இதற்கிடையில் திவாகர் எழுந்து “சார்.. நான் பிக் பாஸ் வீட்ல இருக்கறப்போ” என்று சம்பந்தமில்லாமல் உற்சாகமாக விளக்கம் அளிக்க ஆரம்பிக்க “ஹலோ மிஸ்டர் திவாகர்.. இங்க என்ன நடந்துட்டு இருக்கு.. நீங்க என்ன பேசறீங்க.. இப்படி சம்பந்தமில்லாமல் பேசறதை நிப்பாட்டுங்க” என்று விசே பாய்ந்தவுடன் அப்படியே பம்மி அமர்ந்தார் திவாகர். திவாகரிடம் உள்ள ப்ளஸ் என்னவென்றால் அது எந்தவொரு கண்டனமாக இருந்தாலும் சண்டையாக இருந்தாலும் அடுத்த கணமே துடைத்துப் போட்டு விட்டு இயல்பாக மாறி விடுகிறார். 

முதுகில் குத்துவதில் சிறந்த வீராங்கனை – பாரு

விசே பிரேக்கில் சென்றவுடன் “சபரியோட மூஞ்சே செத்துடுச்சு” என்று சொல்லி மகிழ்ந்தார் பாரு. தண்ணீர் குடிக்கச் சென்ற திவாகர், அங்கிருந்த கிளாஸை தவறுதலாக உடைத்து விட்டு “யார்.. இதை இங்க வெச்சது?” என்று சமாளிக்க வினோத்தும் கம்ருதீனும் அவரைக் கலாய்த்தார்கள். பிரேக் முடிந்து திரும்பிய விசே இதைப் பற்றி சிரித்துக் கொண்டே விசாரிக்க “கிளாஸ் பீஸ் துடைக்கப் போன என் கைல ரத்தம் வருது. அதைப் பத்தி கேக்கலை சார்.. கிளாஸ் உடைச்ச காசை சம்பளத்துல பிடிச்சிடுவாங்களான்னு கேக்கறார் சார்” என்று வினோத் சொல்ல சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார் விசே. 

துஷாரை வறுத்தெடுத்தல், சாப்பாட்டில் உப்பு, கிச்சன் மேடையில் பாரு குத்த வைத்து அமர்ந்தது போன்ற உப்புச் சப்பில்லாத விசாரணைக்குப் பிறகு அடுத்த டாப்பிக்கை கையில் எடுத்தார் விசே. 

“இவங்களால என்னை முகத்திற்கு முன்னாடி குத்த முடியாது. முதுகிற்குப் பின்னாலதான் குத்த முடியும்.. அது யாருன்னு சொல்லுங்க?” என்று அடுத்த அயிட்டத்தை விசே இறக்க, நம் மனதிலேயே பாருதான் சட்டென்று நினைவிற்கு வந்தார் என்னும் போது மற்ற போட்டியாளர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்? எனவே முதுகில் குத்தும் வீராங்கனையாக பாருவின் பெயரை பலரும் சொன்னார்கள். 

BB Tamil 9 Day 14
BB Tamil 9 Day 14

“முகத்திற்கு நேரா ஒண்ணு சொல்றாங்க.. பின்னாடி வேற ஒண்ணு பேசறாங்க” என்று அராரோவின் பெயரை வியன்னா சொல்ல, அரோரா அப்செட் ஆகி கண் கலங்கினார். “பிரவீன் பெயருக்கு பதிலா என் பெயரைச் சொல்லி எல்லா இடத்துலயும் மாட்டி விட்றாரு” என்று திவாகர் குறித்து வினோத் சொல்ல சிரிப்பலை பரவியது. ஆதிரை பற்றி சொல்ல ஆரம்பித்த கம்ருதீன் ‘டிவி சீரியல் காலத்தில்’ நடந்த பிளாஷ்பேக்கை’ எல்லாம் சொல்ல ஆரம்பிக்க “உங்க பர்சனல் விஷயங்கள்லாம் எங்களுக்கு வேணாம்” என்று இடைமறித்தார் விசே. ஒருவரின் பர்சனல் விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்றால் பிக் பாஸ் ஒளிபரப்பில் அவற்றை எடிட் செய்து விடலாமே? ஏன் அதையும் இணைத்து ஒளிபரப்புகிறார்கள்?!

“நான் பாத்ரூம் போனப்ப குத்திட்டாங்க” என்று பழைய கதையை மீண்டும் கம்ரூதீன் ஆரம்பிக்க “நீ கம்முன்னு உக்காருய்யா.. அதுதான் கேமே.. இன்னுமா புரியலை” என்கிற மாதிரி கடுகடுத்தார் விசே. 

“இந்த டாஸ்க் நடத்தினதுக்கு காரணமே.. உங்க சக போட்டியாளரைப் புரிஞ்சிப்பீங்கன்னுதான். இந்த அண்ணன், அக்கா பிஸ்னஸ் எல்லாம் டாஸ்க்ல வெச்சுக்காதீங்க. ஒழுங்கா கேம் ஆடுங்க” என்கிற உபதேசத்தோடு பிரேக்கில் சென்றார் விசே. 

கன்னா பின்னாவென்று வார்த்தைகளை விட்ட கம்ருதீன்

கூடவே திரிந்த வியன்னா, தன்னைப் பற்றி சபையில் புகார் சொன்னதால் அழுது கொண்டிருந்த அரோராவிடம், ஆதிரை பிரச்சினையைப் பற்றி சொல்லி ‘பாருடா செல்லம்’ என்று தவறான டைமிங்கில் ஆஜரானார் கம்ருதீன். “டேய் கம்முனு இருடா.. நான் இங்க எதுக்கு அழுதுக்கிட்டு இருக்கேன்.. நீ குறுக்கால புகுந்து எதைப் பத்தி பேசறே?” என்று அரோரா எகிற ‘என்னடா.. இது… கம்ருதீன்னு பேரு வெச்சிருக்கிறதால.. ஆளாளுக்கு கம்முன்னு இரு’ன்னு சொல்றாங்க’ என்று ஜெர்க் ஆனார் கம்மு. 

‘யாரு முதுகுல குத்துவாங்கன்னு கேட்டா, கேம் தொடர்பா பேசாம.. ஏன் என்னை இழுக்கணும்?” என்று ஆதிரை ஆட்சேபம் எழுப்ப, கம்ருதீனுக்கும் இவருக்கும் பலத்த வாக்குவாதம் எழுந்தது. “உனக்கெல்லாம் என்னைப் பத்தி பேச தகுதியே இல்ல. யாரு நீ.. கேவலமான பிறவி” என்று சைக்கோ போல பல வார்த்தைகளை கன்னா பின்னாவென்று இறைத்தார் கம்ருதீன்.

வினோத்
வினோத்

ஒரு கட்டத்தில் ஆதிரை அமைதியாக முறைத்த படி நிற்க அதற்கும் டென்ஷன் ஆனார் கம்ருதீன். “ஒருத்தரைப் பத்தி இப்படி தப்பா பேசாத” என்று ஆதிரைக்கு சப்போர்ட்டாக வந்து நின்றார் அரோரா. 

கம்ருதீன் – ஆதிரை – அரோரா விவகாரம் என்னவென்று ஒரு மாதிரியாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. தொலைக்காட்சி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆதிரைக்கும் கம்ருதீனுக்கும் இடையே ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கிறது. பிறகு மனக்கசப்புடன் பிரேக் அப் ஆகி இருவரும் பிரிந்து எதிரிகளாகி இருக்கிறார்கள். ‘அவன் பார்க்கற பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டு ஏமாத்துவான்’ என்று அரோராவிடம் ஆதிரை சொல்ல, அவர் அதை ‘யார் கிட்டயும் சொல்லாத’ என்று கம்ருதீனிடம் சொல்ல “என்னைப் பத்தி எப்பவும் தப்பா பேசறா” என்று கம்ருதீன் கோபம் அடைந்து கடுமையான வசவுகளை இறைக்கிறார். இதுதான் இந்த விவகாரத்தின் சித்திரமா?

‘பர்சனல் விஷயங்களை வெச்சு பஞ்சாயத்து செய்யாதீங்க’

பிரேக் சமயத்தில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விசே “வெளியே நடந்த விஷயங்களை, கேமிற்குள் பேசுவது நாகரிகமில்லை. அப்படியெல்லாம் பேசி ‘நான் இந்த மாதிரியான ஆள்’ன்னு காட்டிக்கறதுல என்ன பெருமை’ என்று பொதுவாகச் சொன்னதெல்லாம் கம்ருதீன் குறித்து என்று தெரிகிறது. “டாஸ்க்ல சண்டை போடுங்க. அது கேம். மத்த நேரத்துல வேணாம். மக்களை எண்டர்டெயின் பண்ணுங்க.. உங்க மரியாதையை நீங்கதான் சம்பாதிக்கணும்” என்று அட்வைஸ் செய்தார் விசே. 

அரோரா, ஆதிரை
அரோரா, ஆதிரை

எவிக்ஷன் சடங்கு. “நாமினேஷன்ல இருக்கறவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்ற விசே, ரம்யா, பாரு, திவாகர், சபரி ஆகிய நால்வரையும் காப்பாற்றப்பட்டவர்களாக சொன்னார். மீதமிருந்த நபர்களில் “யார் வெளியே போவாங்க?” என்று கேட்க பெரும்பாலும் கம்ருதீன் என்ற பெயரே சொல்லப்பட்டது. அது கம்ருதீன் மீது அந்தச் சமயத்தில் இருந்த கோபம் போலிருக்கிறது. 

அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் எவிக்ஷன் கார்டை விசே காட்ட, அப்சராவின் பெயர் இருந்தது. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் சமாளித்துக் கொண்டு எழுந்தார் அப்சரா. “நீங்க சொல்ல வேண்டிய செய்திகளை எல்லாம் இந்த ஃபிளாட்பார்மில் நல்லா சொல்லிட்டீங்க..” என்று ஆறுதல் கூறி விடைதந்தார் பாரு. 

கம்ருதீன் x ஆதிரை – தொடரும் சண்டை

விசே அட்வைஸ் செய்த பிறகும் கூட “இவளுக்கு அறிவி்ல்ல. எவ்வளவு வன்மம்.. என்னைப் பத்தி என்னவெல்லாம் பேசியிருக்கா. என் வாழ்கை என்னவாகிறது?” என்று கோபத்துடன் கம்ருதீன் அனத்திக் கொண்டிருக்க “பாரு.. இத்தோட விட மாட்டான்.. இன்னும் பேசுவான்” என்று இன்னொரு புறம் அராரோவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆதிரை. 

மேடைக்கு வந்த அப்சராவிடம் பயண வீடியோ காண்பித்து ‘டாட்டா’ காண்பித்த விசே “பழைய கோபத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு பண்டிகையை சிறப்பா கொண்டாடுங்க” என்று வாழ்த்து சொல்லி விடைபெற்றார். 

கம்ருதீன்
கம்ருதீன்

அதன் பிறகும் கம்ருதீனின் கோபம் அடங்கவில்லை. அரேராவை வம்படியாக கூப்பிட்டு அனத்தினார். கம்ருதீனுக்கு சப்போர்ட் பாரு. இவர்களின் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாருவிற்கும் துஷாருக்கும் இடையில் சண்டை நடந்தது. 

அடுத்த எபிஸோடில் எல்லாப் பகையையும் உள்ளே ஒளித்து விட்டு ‘தீபாவளி கொண்டாட்டத்தில்’ மகிழ்ச்சியாக இருப்பதாக அனைத்துப் போட்டியாளர்களும் பாவனை செய்வார்கள். இது பிக் பாஸ் வீட்டில் மட்டுமா நடக்கிறது?! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.