இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி – தீபாவளியை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம். 

இயக்குநராகும் விஷால் 

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

விஷால்
விஷால்

‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே  விஷால் மற்றும் படக்குழுவுக்கும், ரவி அரசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் எஞ்சிய படப்பிடிப்பை விஷால் இயக்கியதாகவும் தகவல்கள்  வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்று விஷாலே ‘மகுடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “தீபாவளி திருநாளில் ஒரு முக்கியமான முடிவை இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். ‘மகுடம்’ படம் எனது திரையுலக பயணத்தில் நான் இயக்குநராக எடுக்கும் முதல் முயற்சி.

இப்படி ஒரு சூழ்நிலையை நான் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் இப்படியான முடிவை எடுக்க வைக்கின்றன. இது கட்டாய முடிவு அல்ல, பொறுப்புணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு” என்று தெரிவித்திருந்தார். இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் விஷாலுக்கு பலரும் வாழ்த்துகளைத்  தெரிவித்து வருகின்றனர். 

துல்கரின் ‘காந்தா’ 

‘லக்கி பாஸ்கர்’ படத்தை அடுத்து துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி உள்ளது. இப்படத்தை நடிகர் ராணா மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் ஸ்பிரிட் மீடியா மற்றும் வேபேரர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கின்றனர்.

துல்கரின் 'காந்தா'
துல்கரின் ‘காந்தா’

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்ய ஸ்ரீ நடிக்க, சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார். தமிழில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில்  ‘காந்தா’ படம் வருகிற நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருவதாக நேற்று (அக்.20) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். 

பிரபாஸ் பட டைட்டில்

‘சீதாராமம்’ படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி, அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இயான்வி அவர் ஜோடியாக நடிக்கிறார். மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உட்பட பலர் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப்படம், வரலாற்றுப் பின்னணியை கொண்டது. பிரபாஸ் போர்வீரனாக நடிக்கிறார்.படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படாத நிலையில் தீபாவளியை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வருகிற 22ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. 

கருப்பு முதல் சிங்கிள்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான, ட்யூட் படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘கருப்பு’ படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தீபாவளியான  நேற்று (அக்.20) ‘கருப்பு’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும்,கருப்பு படத்தின் முதல் சிங்கிளான ‘GOD MODE’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். விஷ்ணு எடவன் எழுதியிருக்கும் இப்பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் சாய் அபயங்கர்.

இளையராஜாவின் அடுத்த சிம்பொனி  

தனது அடுத்த சிம்பொனி இசையை எழுதுவது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ளார். அத்துடன், சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுத உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இளையராஜா
இளையராஜா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,” எனது அடுத்த சிம்பொனி எழுதுவதற்கு, அம்மாவின் நினைவு தினத்தை முடித்து விட்டு வந்து தொடங்கலாம் என இருக்கிறேன். இத்துடன் புதிய படைப்பாக சிம்பொனிக் டான்சர்ஸ் என்ற இசைக்கோர்வையை எழுதுவதாக இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக சொல்கிறேன்”  என்று அடுத்த சிம்பொனி குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். 

படப்பிடிப்பு நிறைவு 

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில்  ரவி மோகன், ஆதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.