பழநி, கொடைக்கானலில் கனமழை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பழநி, கொடைக்கானலில் இன்று நாள் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. பழநி வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மற்றும் பழநியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே பெய்த கன மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கொட்டிவரை அருவி, தேவதை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்து. மலைக்கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. நாள் முழுவதும் தொடர்ந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழை காரணமாக, கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரத்து வருகிறது. இதில், வரதமாநதி அணையில் (மொத்தம் 66.47 அடி) 66 அடிக்கு தண்ணீர் உள்ளது.

தற்போது, அணைக்கு விநாடிக்கு 152 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வரட்டாறு, பாலாறு மற்றும் சண்முகநதி வழியாக செல்லும். எனவே, பழநி மற்றும் ஆயக்குடி பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அணையின் நீர் கொள்ளளவு கண்காணிக்கும் பணியில் நீர் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பழநி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 10 மணி முதல் விடாமல் சாரல் மழை பெய்தது. நண்பகல் 12 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர். மழை காரணமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.