புதுச்சேரி,
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதனால், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று, புதுச்சேரியிலும் மழையின் தாக்கம் காணப்படுகிறது. கனமழையால், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் விரைவாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரியில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரிக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழையால் புதுச்சேரியின் பாகூர் பகுதியில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிக கவலை அடைந்துள்ளனர். விளைந்துள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. காரைக்கால் பகுதிகளிலும் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
புதுச்சேரியின் ஈ.சி.ஆரில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்காலிக மோட்டார்களை கொண்டு மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.