சர்ஃபராஸ் கான் விஷயத்தில் நிர்வாகம் செய்த தவறு.. போட்டுடைத்த அஸ்வின்!

கடந்த ஆண்டு சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 371 ரன்களை குவித்துள்ளார். அதில் ஒரு சதம், மூன்று அரைசதமும் அடங்கும். உள்ளூர் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக மலைபோல் ரன்கள் குவித்து வருவதால், அவருக்கு தேசிய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்து வந்தது.  

Add Zee News as a Preferred Source

ஆனால், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவரை புறக்கணித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரது பெயர் அணியில் இல்லை. இதேபோல், இந்திய ஏ அணிக்குள் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவுக்கு வரவுள்ள நான்கு நாள் டெஸ்ட் தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஏ அணியில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் சர்ஃபராஸ் கானின் பெயர் பட்டியலில் இல்லை.  

உடற்தகுதி மேம்படுத்தியும் வாய்ப்பு இல்லை  

முன்பு அதிக உடல் எடை காரணமாகவே தனது தேர்வு தடுக்கப்பட்டதாக நினைத்த சர்ஃபராஸ், கடந்த சில மாதங்களில் தன்னுடைய உடற்தகுதியை மேம்படுத்த கடுமையாக உழைத்தார். தற்போது அவர் ரன்களையும் அடித்து, சிறப்பான உடற்பயிற்சியுடன் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால், இந்த அனைத்து முன்னேற்றங்களும் இருந்தும், அணி நிர்வாகம் அவருக்கு இன்னும் வாய்ப்பளிக்க மறுப்பதே ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.  

நிர்வாகம் கதவை மூடி விட்டது

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது தொடர்பாக பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, “சர்ஃபராஸ் கான் தன்னை நிரூபிக்கச் செல்ல வேண்டிய கடைசி கதவையும் நிர்வாகம் இப்போது மூடி விட்டது. அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை யாருக்கும் புரியவில்லை. முன்னதாக சுப்பிரமணியம் பத்ரிநாத், மனோஜ் திவாரி போன்றவர்கள் இந்திய ஏ அணியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், அவர்களும் புறக்கணிக்கப்பட்டனர். இதே போன்று சர்ஃபராஸின் முயற்சிகளுக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது வருத்தப்படத்தக்கது.  

அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக விளையாடி வருகிறார். அவருக்கு இப்போது வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது. ஆனால், அவரது எதிர்கால கதவுகளை நிர்வாகத்தினர் மூடி விட்டனர். இதுபோன்ற நிலைகள் ஒரு வீரனின் மனநிலையையும் பாதிக்கும்” என அஸ்வின் உணர்ச்சியோடு குறிப்பிட்டார்.  

ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு  

இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் விவாதமாக மாறியுள்ளது. பல முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் சர்ஃபராஸிற்கு வாய்ப்பு வழங்காதது அநியாயம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய ஏ அணியிலும் கூட இடம் கிடைக்காதது, அணி தேர்வு நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.  

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.