தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது ஆம்பூர், ராமநாதபுரம் தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிட்டியது. 2014 மக்களவை மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டது மமக.

2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்தது. இதையடுத்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், அக்கட்சியின் சார்பில் பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும், மணப்பாறையில் அப்துல் சமதும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், 2019 முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாததைக் காரணம் காட்டி, கடந்த செப்டம்பரில் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 474 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இது குறித்து நம்மிடம் பேசிய மமக நிர்வாகிகள் சிலர், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29 ஏ பிரிவில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் இருக்கிறதே தவிர தேர்தலில் நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

அப்படி இருக்கையில், மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை ரத்து செய்தது என்பது பிரதிநிதித்துவச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இது குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். அதேசமயம், இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சொந்தச் சின்னத்தில் போட்டியிடும் யோசனையை கூட்டணித் தலைமைக்கு தெரிவிக்க இருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.