சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார்

நாமக்கல்: சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (மலைவாழ்மக்களுக்கான தனி தொகுதி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலை நாமக்கல் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கு.பொன்னுசாமி கடந்த 1954ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேல், தாயார் வெள்ளையம்மாள். மனைவி ஜெயமணி, இவருக்கு மாதேஸ் (39) என்ற மகனும், பூமலர் (34) என்ற மகளும் உள்ளனர். கொல்லிமலை இலக்கிராய்ப்பட்டியைச் சேர்ந்த இவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப தொழில் விவசாயமாகும்.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் திமுகவின் தீவிர உறுப்பினரான இவர் கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். மீண்டும் 2021-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

கொல்லிமலை சிறந்த சுற்றுலாத்தலம் ஆவதற்கும், தனி தாலுகா ஆவதற்கும் கு.பொன்னுசாமி மிகவும் பாடுபட்டார். உயிரிழந்த எம்எல்ஏ பொன்னுசாமியின் உடலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் சேந்தமங்கலம் அருகே காரவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.