இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த சூழலில், இன்று (அக்டோபர் 23) இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
Add Zee News as a Preferred Source
59வது அரைசதம்
அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த போட்டியை போல இந்திய அணி தொடக்கமே விக்கெட்களை இழந்தது. கேப்டன் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி கடந்த போட்டியை போல் டக் ஆகி வெளியேறினார். இந்த சூழலில், களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரோகித் சர்மா நிலைத்து நின்று ரன்களை சேர்த்தனர். நீண்ட நாட்கள் கழித்து சர்வதேச போட்டிக்கு திரும்பிய ரோகித் சர்மா இப்போட்டியில் அரைசதம் விளாசினார். பின்னர் 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில்தான் ஹிட்மேன் ரோகித் சர்மா இமாலய மைல்கல்லை எட்டி இருக்கிறார். அதாவது இப்போட்டி தொடர்ங்குவதற்கு முன்பு சவுரவ் கங்குலி 11,221 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ரோகித் சர்மா இப்போட்டியில் 73 ரன்கள் எடுத்ததன் மூலம் முறியடித்து இருக்கிறார். இந்திய வீரர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், சச்சின், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோர் அடுத்தடுத்து இருந்தனர்.
தற்போது ரோகித் சர்மா கங்குலியை பின்னுக்கு தள்ளி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதே சமயம் சவுரவ் கங்குலி 308 ஒருநாள் போட்டிகளில் 11,221 ரன்கள் எடுத்திருந்தார்., ஆனால் ரோகித் சர்மா தனது 275வது இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டியிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள்:
இந்த பட்டியலின் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களை 463 போட்டிகளில் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து விராட் கோலி 304 போட்டிகளில் 14,181 ரன்கள், ரோகித் சர்மா 275 போட்டிகளில் 11,249 ரன்கள், சவுரவ் கங்குலி 308 போட்டிகளில் 11,221 ரன்கள், ராகுல் டிராவிட் 340 போட்டிகளில் 10,728 ரன்களும் அடித்து பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஒரே போட்டியில் மூன்று சாதனைகள்
ஆஸ்திரேலியா மண்ணில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை.
இந்தியாவிற்காக தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடம்.
இதையடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் என ஹாட்ரிக் சாதனையை இப்போட்டியின் மூலம் ரோகித் சர்மா நிகழ்த்தி உள்ளார்.
About the Author
R Balaji