அங்காரா,
ஐரோப்பிய நாடான துருக்கி ராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் முக்கிய உறுப்பினராக உள்ளது. மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து 3-வது மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக விளங்கும் துருக்கி, இஸ்ரேல் மற்றும் கிரீஸ் உள்ளிட்ட நாடுகளால் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து வருகிறது.
இதனால் தனது ஆயுதப்படையை வலுப்படுத்த துருக்கி ராணுவம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல போர் தயாரிப்பு நிறுவனமாக ‘லாக்ஹீட் மார்ட்டீன்’னின் எப்-16 மற்றும் எப்-35 ரக போர் விமானங்களை வாங்க அந்த நிறுவனத்துடன் துருக்கி அரசாங்கம் ஒப்பந்தமிட்டுள்ளது.
மேலும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் கூட்டு தயாரிப்பான ‘யூரோபைட்டர் டைபூன்’ போர் விமானங்களையும் வாங்க துருக்கி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 12 எப்-35 ரக போர் விமானங்களையும், 28 யூரோ டைபூன் விமானங்களையும் இந்தாண்டு இறுதிக்குள் துருக்கி பெற இருக்கிறது.