கல்பாக்கம் / திருவள்ளூர்: கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டு வாயலூர், வள்ளிபுரம் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதில், கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் – வேப்பஞ்சேரி இடையே கடலின் முகத்துவாரம் அருகே, பாலாற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, விநாடிக்கு 13.12 ஆயிரம் கனஅடியில் உபரிநீர் வெளியேறி வருகிறது.
பாலாற்று படுகையில் கூடுதலாக தடுப்பணை அமைக்கப்பட்டால், இதில் சேகரமாகும் நீர், கடலில் கலப்பது தடுக்கப்படும். இதுதவிர, இரு கரையோரங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்கள் பாசனவசதி பெறுவதோடு, விவசாயிகளும் பயன்பெறும் நிலை ஏற்படும். அதனால், நல்லாத்தூர் பாலாற்றில் தடுப்பணை அமைக்க நீர்வளத் துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளப்புத்தூர், சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழையால், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், வெள்ளப்புத்தூர் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளதால், அச்சாலையில் வாகனபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 3,980 கனஅடியாக உள்ளது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு,35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,389 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம், 32.54 அடியாகவும் உள்ளது.
புழல் ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 542 கனஅடியாக உள்ளது. இதனால், 3,300 மில்லியன்கனஅடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,753 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம் 18.71 அடியாகவும் இருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 368 கனஅடி, கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 100 கனஅடி என, நீர்வரத்து உள்ளது.
இதனால், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 545 மில்லியன் கனஅடியாகவும், நீர் மட்ட உயரம் 12.81 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு,36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 437 மில்லியன் கனஅடியாகவும், நீர்மட்ட உயரம் 34.70 அடியாகவும் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21.27 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 2,926 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கான நீர்வரத்து 1,980 கனஅடியாக உள்ளது. 500 கனஅடி திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது 750 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆரணி ஆற்றில் விநாடிக்கு 1,803 கனஅடி என பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில் பெரியபாளையம் அருகே தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் பெரும் இன்னல்லுக்கு உள்ளாகினர்.