`கேம் விளையாடாதன்னு திட்டுனாங்க' கத்திரிகோலால் தாயைக் குத்திய மகன் – இரண்டு சிறுவர்கள் கைதான பின்னணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் – பரமேஸ்வரி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் சந்தோஷ் (சிறுவனின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற மகனும் இருக்கிறார்கள்.

சந்தோஷ் அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். அக்டோபர் 19-ம் தேதி குணசேகரனுக்கும் – பரமேஸ்வரிக்கும் புடவை வாங்கிய விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதில் கோபித்துக்கொண்டு சென்ற பரமேஸ்வரி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதில் பயந்துபோன குணசேகரன், உறவினர்களுடன் ஊர் முழுக்க தேடியிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட பரமேஸ்வரி

அப்போது விவசாய நிலம் ஒன்றில் கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார் பரமேஸ்வரி. அதைப் பார்த்ததும் குணசேகரன் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதிருக்கின்றனர்.

அதையடுத்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸார், வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்து விசாரணையைத் தொடங்கினர். கொலை நடந்த இடத்தில் அறுந்து கிடந்த பட்டன்களை வைத்து ஆய்வு செய்ததில், பரமேஸ்வரியை அவரின் மகன் சந்தோஷ் கொலை செய்தது உறுதியானது.

அதையடுத்து, `அடிக்கடி படிக்கச் சொல்லி அம்மா வற்புறுத்தியதால் கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து அதிர வைத்திருக்கிறான் சிறுவன் சந்தோஷ்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜ் – கோமதி தம்பதி. கடந்த 21.10.2025 அன்று மாலை நடராஜனுக்கு போன் செய்த அவரது 14 வயது மகன் பிரவீன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), `வீட்டின் பின்பக்கக் கதவுகளை உடைத்துக் கொண்டு அரிவாள்களுடன் உள்ளே நுழைந்த யாரோ, அம்மாவை கழுத்துல குத்திட்டங்க’ என்று அலறியிருக்கிறான்.

அதைக் கேட்டு ஓடிவந்த நடராஜ், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த கோமதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த அண்ணாமலை நகர் போலீஸார், நடராஜ் கோமதியின் மகன் பிரவீனை கைது செய்திருக்கின்றனர்.

கத்திரிக்கோல் | கோப்புப் படம்

அதையடுத்து பிரவீனிடம் நடத்திய விசாரணையில், `நான் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடுவதால் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். அத்துடன் எப்போது பார்த்தாலும் படிச்சியா, ஹோம் வொர்க் பண்ணியான்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

அன்னைக்கு தூங்கிட்டிருந்த அம்மாவை எழுப்பினேன். அப்போது அவங்க என் கன்னத்துல அடிச்சாங்க. நானும் பதிலுக்கு அடிச்சேன், அதோட பக்கத்துல இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவங்க கழுத்துல குத்தினேன்.

அப்புறம் அப்பாவுக்குப் போன் பண்ணி, யாரோ வந்து அம்மாவை கத்தியால குத்திட்டு ஓடிட்டாங்கனு நாடகமாடினேன்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கோமதி, தன்னுடைய மகன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறையிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.