தஞ்சாவூா்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டினார்.
தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். அப்போது விவசாயிகள் பல நாட்களாக நெல்லைக் கொட்டி வைத்து விற்பனை செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனக் கூறினர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 6.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டை விட அதிகம். இது கடந்த ஜூன் மாதமே முதல்வர் கவனத்துக்குச் சென்றது. கொள்முதல் விஷயத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து விட்டோம் என முதல்வர் கூறினார். ஆனால் அவர் இதுவரை எந்த முன்னேற்பாடு பணிகளையும் செய்யவில்லை என்பது தற்போது உள்ள சூழலை வைத்து அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் .
செப்டம்பர் மாதமே கொள்முதல் பணி தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் காலதாமதமாக தான் கொள்முதல் செய்துள்ளனர். அதிலும் சாக்குகள் தட்டுப்பாடு, போதிய லாரிகள் இயக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொள்முதல் தாமதமாகி வருகிறது.
இதனால் ஒவ்வொரு நிலையங்களிலும் ஏராளமான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதற்கு தமிழ்நாடு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இது தவிர தனியார் கொள்முதல் நிலையங்களில் வாடகையை விவசாயிகளிடமிருந்து வசூலிக்கின்றனர். மூட்டைக்கு ரூ.40 வரை வாங்குகிறார்கள். கொள்முதல் தாமதத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி தான் காரணம் என மத்திய அரசு மீது தமிழக உணவுத்துறை அமைச்சர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
செறிவூட்டப்பட்ட அரிசி என்பது சத்தான அரிசியாகும் . இந்த அரிசியால் ஏராளமான பயன்கள் கிடைக்கும் என்பதால் மத்திய அரசு கொண்டுவந்த ஒரு நல்ல விஷயமாகும் . ஆனால் தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தியது தமிழக அரசுதான். இதற்கு முதலமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும். மழைப்பொழிவு அளவு விவரங்களை முன்னதாகவே கணிப்பதற்கு ரூ.10 கோடி மதிப்பில் நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆனால் அவ்வாறு வாங்கி அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் தற்போது பெய்துள்ள மழையின் அளவு விவரங்கள் முன்கூட்டியே தெரிந்திருக்கும் . இதன் மூலம் நவீன கருவி வாங்கிய விஷயத்தில் அரசு மோசடி செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆய்வு செய்த பிறகுதான் கொள்முதல் தாமதத்தால் நெல்மணிகள் முளைத்த விவரமே தமிழக அரசுக்கு தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட வயல்கள் மற்றும் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மணிகளை பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர் பாதிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. தற்போதும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. தமிழகத்தில் நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்றார்.
இந்த ஆய்வின் போது மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர்கள் ஜெய் சதீஷ் (தெற்கு), தங்க கென்னடி ( வடக்கு) மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.