சென்னை: எந்த அளவுக்கு அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர், வியாசர்பாடி கால்வாய் தொடங்குமிடமான ஜீரோ பாயின்ட்டில் தூர்வாரும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும், மழைப்பொழிவு கூடுதலாக இருந்தாலும் அதனை சமாளிக்கக் கூடிய வகையில் துரித நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கைப் பணிகளும் இருக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “வட சென்னையை பொறுத்தவரை 18 கால்வாய்கள், 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. மொத்தம் 331 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. முதல்வர் அனைத்தையும் கண்கானித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வைக்கும், புகார், கோரிக்கைகை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கண்கானிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். அடுத்த பத்து நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்த அளவுக்கு அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.