கான்பெர்ரா,
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
இதையடுத்து இந்திய வீரர்கள் இந்த தொடருக்காக தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே பந்து வீசுவாரா? என்பது குறித்த கேள்விக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சுவாரஸ்யமான பதில்களை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஷிவம் துபே இந்த தொடரில் நிச்சயமாக பந்து வீசுவார். இங்குள்ள ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும்? என்பது அவருக்கு தெரியும். ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்த அவர் பயிற்சியின் போது மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அதோடு தனது பந்துவீச்சில் தினமும் பயிற்சியும் செய்து வருகிறார்.
அவர் தொடர்ந்து பந்துவீசி பயிற்சி பெறுவதாலும் அவரது திறன் மீது எனக்கு நம்பிக்கை இருப்பதனாலும் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தேன். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளாக நான் அவரை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அவரால் நிச்சயம் டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீச முடியும். எனவே இந்த ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் பந்து வீசுவார்.
இந்த தொடருக்காக தனது பவுலிங்கில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ள அவர் சரியான முறையில் தயாராகி வருகிறார். அதோடு அவரது திட்டம் என்ன? அவரது பந்துவீச்சில் என்ன செய்யலாம்? என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே அதற்கு ஏற்றவாறு அவருக்கு பந்துவீச வாய்ப்பினை வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.