பாட்னா,
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட மேலும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில், அம்முடிவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பாட்னா விமான நிலையத்தில், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா கூறியதாவது:-
பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது சந்தித்த சிரமங்களுக்கு என்ன செய்வது? அந்த சமயத்தில், காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் இன்னும் பதில் அளிக்காதது ஏன்? அதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டியதாகி விட்டது.தேர்தல் கமிஷன் தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது.12 மாநிலங்களில் திருத்தப்பணி நடத்தும்போது, 2003-ம் ஆண்டின் வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் பின்பற்றுமா என்பதை விளக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை, புதிய பீகாரை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.