ரியோ டி ஜெனீரோ,
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதுபற்றி ரியோ நகர கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ கூறும்போது, போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், போதை பொருள் கும்பலை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் 60 பேர் மற்றும் 4 போலீசார் உள்பட 64 பேர் பலியானார்கள். 81 பேர் வரை கைது செய்யப்பட்டு உள்ளனர். ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கையிது என அவர் குறிப்பிட்டார்.
இதில், 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மோதலில் பலர் காயமடைந்து உள்ளனர். இதனால், அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது. போதை பொருள் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை தேவையான ஒன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசில் வரலாற்றில், போலீசாரின் இந்த நடவடிக்கை அதிக வன்முறையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.