பாட்னா: “பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பிஹார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளுக்காக பிஹாரை சுரண்டிவிட்டு தொழில்களை எல்லாம் குஜராத்தில் நிறுவி, பிஹாரை சிறைபிடித்து வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. பிஹார் மக்கள் ஒன்றுபட்டு இந்தக் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பத்து லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 ஆயிரம் பணத்தை விநியோகித்து அரசாங்கம் லஞ்சம் கொடுக்கிறது. இதனை தேர்தலுக்கு முன்பு கொடுக்கும் லஞ்சம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். தேர்தல் ஆணையம் இதை எப்படி அனுமதிக்கிறது?.
நிலப் பற்றாக்குறை இருப்பதால் பிஹாரில் தொழிற்சாலைகளை அமைக்க முடியாது என்று அமித் ஷா கூறியுள்ளார். தொழில்கள் அமைக்க நிலப் பற்றாக்குறையை ஒரு காரணமாகப் பேசும் உள்துறை அமைச்சரை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. பிஹாரை முன்னேற்றுவது அவர்களின் நோக்கம் அல்ல என்பதை இது காட்டுகிறது. அவர்கள் பிஹாரில் தொழிற்சாலைகளை நிறுவவோ அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் இந்த மாநிலத்தைக் கைப்பற்றி கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.” என்று தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
