கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமலாக்கத்துறை இயக்குநர், தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் நகராட்சி நிர்வாகம் நீர் வழங்கல் துறையில் அமைச்சர் ரூ. 888 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை கூறி ஆதாரத்துடன் வழக்குப்பதிவு செய்ய சொல்லியுள்ளனர்.

டிஜிபி உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அமைச்சர் சக்கரபாணியின் துறையில் ரூ.160 கோடிக்கும், அமைச்சர் நேருவின் துறையில் ரூ.888 கோடிக்கும் ஊழல் நடந்துள்ளது. முதலமைச்சர் அதைப் பற்றி வாய் திறக்காமல், பிரதமர் பேசாத ஒரு விஷயத்தை சொல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பாஜகவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் வேலையை விட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் நல்ல அரசியலை கொடுப்பதற்கான கூட்டணி அமையும் என்ற எண்ணத்தில் தொண்டனாக என் வேலையை செய்கின்றேன்.

யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்ற கருத்தை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. பிடித்திருந்தால் இருப்பேன். பிடிக்கவில்லை என்றால் கிளம்பி விவசாயம் பார்க்க போகிறேன். எங்கள் கைக்காசை செலவு செய்து அரசியலில் இருக்கிறோம்.
பிடிக்கவில்லை என்றால் அதே வேலையை சமூக இயக்கமாக மாறி பொதுமக்களுக்கு செய்ய போகிறோம். மாற்றத்திற்காக காத்திருக்கிறேன். சற்று பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் பேசுகிறேன். எனக்கு பிரதமர் மீது நம்பிக்கை குறையவில்லை. முதல் தலைமுறை அரசியல்வாதியாக, மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். சில நேரம் மனசாட்சிக்கு எதிராகவும் பேசுகிறேன்.

மனசாட்சி ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. அதிமுகவில் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை. எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று அதிமுக தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள். அமித் ஷாவுக்கு கொடுத்த வார்த்தைக்காக கட்டுப்பட்டிருக்கிறேன். திரும்பிப் பேசுவதற்கு எவ்வளவு நேரமாகிவிடும்.“ என்றார்.