பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதான அணிகளான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு தமிழகத் திட்டங்கள் தாக்கம் செலுத்தியுள்ளன. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹெச்ஏஎம், ஆர்எல்பி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்), விஐபி, சிபிஐ, சிபிஎம், ஐஐபி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மகா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில், இரு கூட்டணிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை முக்கிய ஆயுதமாக நம்பியுள்ளன. எனவே, இந்த இரு தேர்தல் அறிக்கைகளிலும் மக்களை கவரும் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக இந்த கூட்டணிகளின் இரு தேர்தல் அறிக்கையிலும் தமிழக திட்டங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் நிதியுதவி, 200 யூனிட் இலவச மின்சாரம், மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் உயர்வு, சிலிண்டர் மானியம், மாணவர்களுக்கு உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு தமிழக மாடல் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சூழலில், தற்போது வெளியாகியுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலும் தமிழக மாடல் திட்டங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக திமுக அரசால் சமீபத்தில் தொடங்கி பெரும் வரவேற்பை பெற்றுள்ள பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் பிஹாரில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை பின்பற்றி வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி திட்டம், பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டம், ஏழை எளியோருக்கான இலவச வீடுகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மாதிரி வாக்குறுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி வெளியிட்டுள்ளது.
அதேபோல மருத்துவ காப்பீடு, மாவட்டம்தோறும் மருத்துவமனைகள், தரமான மருத்துவ சேவை, தரமான இலவச கல்வி, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளிலும் தமிழகத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
முக்கியமாக, இரு கூட்டணிகளின் தேர்தல் அறிக்கையிலும் இம்முறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் – பழங்குடியின சமூகத்தினர் மேம்பாடு குறித்த பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அதேபோல, தொழில் மேம்பாடு, மெட்ரோ திட்டங்கள், சாலை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து வாக்குறுதிகளும் இம்முறை பிஹார் தேர்தலில் கவனம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எப்போதும் இலவச அறிவிப்புகள், பெண்களுக்கான திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கல்வி, மருத்துவம், விவசாயம், உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி போன்ற பல்வேறு பிரிவுகளில் மக்களை கவரும் அறிவிப்புகள் இடம்பெறும். அதே பாணியை இந்த முறை பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆகியவை பின்பற்றியுள்ளன.
பிஹாரில் உள்ள மக்களிடம் தமிழகம் வளர்ச்சியடைந்த மாநிலமாக முன்னிறுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் தமிழகத்துக்கு வேலைவாய்ப்புக்காக படையெடுக்கும் மக்கள் தமிழகத்தின் வளர்ச்சியை நேரில் பார்த்தவர்கள். இவர்கள் தமிழகத்தில் பணியாற்றிய நாட்களில் தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்கள். எனவேதான், ‘தமிழ்நாடு மாடல்’ வாக்குறுதிகள் தற்போதைய பிஹார் தேர்தலில் அதிகம் கவனம் பெற்றுள்ளன என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
பிரதான கூட்டணிகள் மட்டுமின்றி பிஹாரில் புதிதாக களம் கண்டுள்ள பிரசாந்த் கிஷோரும் தமிழகத்தில் தேர்தல் பணிகளில் களம் கண்டவர். இதனால் அவர் பிஹார் தேர்தல் பரப்புரை பேச்சுக்களில் அவ்வப்போது தமிழகம் குறித்து குறிப்பிட்டு வருகிறார். இதனால் அவரின் தேர்தல் அறிக்கையிலும் தமிழக மாதிரி அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
சமூக நீதி, தொழில் துறை, கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் திட்டங்கள், விவசாயிகள் நலன் என பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கு தமிழகமே முன்மாதிரி. அந்த வகையில் தற்போதைய பிஹார் தேர்தலிலும் ‘தமிழ்நாடு மாடல்’ அறிவிப்புகள் தடம் பதித்துள்ளது என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.