பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புட்டனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன் (24). உணவு டெலிவரி ஊழியரான இவர் கடந்த 25-ம் தேதி இரவு தனது நண்பர் வருண் குமாருடன் புட்டனஹள்ளி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அவரது இரு சக்கர வாகனம் சாலையின் எதிர்ப்புறத்தில் வந்த காரின் மீது மோதியது. இதனால் கார் உரிமையாளர் மனோஜ் குமார் (34), அவரது மனைவி ஆர்த்தி ஷர்மா (30) ஆகிய இருவரும் சத்தம் போட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்த தர்ஷன், அங்கிருந்து தப்பியோடியதால் மனோஜ் குமாரும், ஆர்த்தி ஷர்மாவும் காரை யூ டர்ன் செய்து கொண்டு, 2 கி.மீ. துரத்தி சென்று தர்ஷனின் இரு சக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றினர். இதில் பலத்த காயமடைந்த தர்ஷன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வருண் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புட்டனஹள்ளி போக்குவரத்து போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் வருண்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி கேமராவை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது சாலையில் ஏற்பட்ட மோதலில் மனோஜ்குமாரும் அவரது மனைவி ஆர்த்தி ஷர்மாவும் தர்ஷன் மீது காரை ஏற்றி கொன்றது உறுதியானது. மேலும், சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணிக்கு முகமூடி அணிந்து வந்து, சம்பவ இடத்தில் சிதறி கிடந்த காரின் உடைந்த பாகங்களையும் சேகரித்தது கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து ஜே.பி.நகர் போலீஸார் மனோஜ்குமார், ஆர்த்தி ஷர்மா ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.