சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பல விநோதமான நிகழ்வுகள் பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் பதிவின்படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மனைவி ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோரின் நடத்தை பெரியளவில் மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
அந்த நபரின் தாய் மிகுந்த மத பழக்கவழக்கங்களைக் கொண்டவர் என்பதால், வீட்டில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான விதியை வைத்துள்ளார்.

இந்த விதியை கணவன், மனைவி இருவரும் மதித்து நடந்தாலும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. வெளியிடங்களுக்குச் செல்லும்போது மட்டும் அவர்கள் வெங்காயம், பூண்டு கலந்த உணவுகளைச் சாப்பிடுகின்றனர்.
இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கு அடிக்கடி ஏற்படும் சண்டைகளால் மனமுடைந்த மனைவி, கூட்டுக் குடும்பமாக வாழ முடியாது என்றும், தனியாக வீடு எடுத்துச் செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
மனைவியின் இந்த முடிவை ஆதரிப்பதாகவும், தனியாக வீடு எடுத்து வசிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நபர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.