புதுடெல்லி,
இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரான மானுவல் பிரடெரிக் பெங்களூருவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலப் பிரச்சினை காரணமாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். 78 வயதான பிரடெரிக்கின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவரான பிரடெரிக் நீண்ட வருடங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தார்.
1971-ம் ஆண்டுக்கு இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பெற்ற பிரடெரிக் தொடர்ந்து 7 ஆண்டுகள் தேசிய அணிக்காக ஆடினார். கோலை தடுப்பதில் துடிப்பும், துணிச்சலும் மிக்கவராக விளங்கிய அவர் 1972-ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியில் கோல்கீப்பராக இருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் கேரள வீரர் என்ற பெருமையை பெற்றார்.
பிரடெரிக் மறைவுக்கு ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே, பொதுச் செயலாளர் போலோநாத் சிங் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.