புதுடெல்லி,
யு.பி.ஐ. பயன்பாடு மக்களிடயே அதிகரித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக தற்போது பணபரிமாற்றம் நடைபெறுகிறது. ஒரு ‘கிளிக்’ மூலமாகவே பணம் அனுப்பவும் பெறவும் உதவுவதால், இது இந்தியாவில் மிகவும் பிரபலமான பண பரிவர்த்தனை சேவையாக வளர்ந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் குறித்து தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த மாதத்தில் யு.பி.ஐ. மூலமாக மொத்தம் 2 ஆயிரத்து 70 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் கணக்கை காட்டிலும் 3.6 சதவீதம் அதிகமாகும்.
இந்த பரிவர்த்தனைகள் மூலமாக ரூ.27.28 லட்சம் கோடி பண பரிமாற்றம் நடந்தது. இது இதுவரை இல்லாத சாதனை ஆகும். இது அதற்கு முந்தைய மாதத்தை காட்டிலும் 9.5 சதவீதம் அதிகமாகும். தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகள் யு.பி.ஐ. மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரியில் சீர்திருத்தம் மற்றும் பண்டிகை கால எதிரொலி காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.