சென்னை: கோவையில் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என தவெக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது என்பதற்கு, கோவை தனியார் கல்லூரி மாணவி மீது நிகழ்த்தப்பட்ட கூட்டு பாலியல் வன்முறை மற்றுமொரு சாட்சி.
போதை கலாச்சாரத்தால் தமிழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள் என்று பலமுறை வலியுறுத்தியும் இந்த போலி ‘அப்பா’ மாடல் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் முறையாக எடுக்காத காரணத்தால், போதையின் பாதையில் சென்ற அந்த கூட்டம் நேற்று (2-11-2025) இரவு கோவை மாநகர் விமானநிலையம் ஒட்டியுள்ள பகுதியில், தனியார் கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
தமிழ்நாட்டின் மகள்களுக்கு பாதுகாப்பு தர முடியாத தி.மு.க அரசு வெட்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அச்சமின்றி சுற்றுகிறார்கள், ஏனெனில் முதல்வரின் இரும்புக் கை, தமிழ்நாட்டு மகள்களை அல்ல… திமுக அமைச்சர்களை அமலாக்கத் துறையில் இருந்து காப்பாற்ற தான் பயன்படுகிறது!
திமுக ஆட்சி அராஜகம் செய்பவர்களுக்கான ஆட்சி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.